தொடர் படத் தோல்விகளைச் சந்தித்துவருவதால், இனி நடிக்கும் படங்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்போவதாக முடிவெடுத்துள்ளார் விக்ரம். அந்த வரிசையில், தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை 'கோமாளி' இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.rnகடந்த மாதம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படம், அளவான பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு அதிக வசூலைக் குவித்தது. ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்தப் படம், ரிலீஸுக்கு முன்னரே ரஜினிகாந்த் குறித்த கருத்தால் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி நீக்கப்பட்டது. படமும் வெளியாகி எல்லா தரப்பு ரசிகர்களிடமும் சென்றடைந்து வெற்றிபெற்றது.rnஏற்கெனவே, 'கோமாளி' படத்தின் பாலிவுட் உரிமையை போனிகபூர் வாங்கிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதனுக்கு புதிய கார் ஒன்றை ஐசரி கணேஷ் பரிசளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, தயாரிப்பு நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத் தகவல்படி, ஐசரி கணேஷ் மீண்டும் பிரதீப்பை ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.rnதற்போது விக்ரம், இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் படத்திலும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த இரு படங்களுமே இன்னமும் ப்ரீ-புரொடக்ஷனில் இருப்பதால், அதற்கு முன்பே இந்தப் படத்தில் நடித்திட முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது. பிரதீப், தன் ஸ்கிரிப்ட்டைத் தயாராக வைத்திருப்பதாலும் குறைந்த நாள்களிலேயே படத்தை முடித்துவிடலாம் என உறுதியளித்திருப்பதாலும், தன்னுடைய தேதிகளை இந்தப் படத்துக்கு ஏற்றவாறு மாற்றிவருகிறாராம் விக்ரம்.